தஞ்சாவூர்: உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் முன்னோட்டமான கருத்தரங்கம் மத்திய அரசின் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T) இன்று (டிச.17) தஞ்சாவூரில் நடத்தியது.
மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கருத்தரங்கில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் வணிக நிறுவன சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துக்களைக் கூறினர்.
மேலும், தொழில் நிறுவனங்கள் தொடங்கவும், தொய்வின்றி நடத்துவதற்கு அரசின் நடைமுறைகள், அரசு தரும் ஆதரவுகள், தொழில்நுட்ப நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உரிய ஆளுமைகள்,வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் உரை நிகழ்த்தினர்.
இதில், தொழில் துறையினர், வணிகர்கள், தொழில் முனைவோர்கள், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், ஆலோசகர்கள், கல்வி நிறுவன வழிகாட்டிகள், சுய தொழில் ஊக்குவிப்பாளர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.27 கோடியே 13 லட்சம் மதிப்பில் சுமார் 3.40 ஏக்கர் பரப்பளவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.