தஞ்சையில் நடைபெற்ற இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர்: மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலிங் சார்பில் பெண்களுக்கான இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (அக்.21) தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், "இன்றைய சமூகத்தில் எது பெரிய பிரச்சினையாக உள்ளதோ, இல்லையோ, சமூக வலைதளங்களால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகமாகி உள்ளன. சோசியல் மீடியா வந்த பிறகு friend Request கொடுத்தால் போதும், அரசியல்வாதிகளுக்கு ஓட்டு வாங்குவது போல் உடனடியாக Request கொடுத்ததற்கு அப்ரூவ் கொடுத்து அதில் மாட்டிக் கொள்வது. 'Prevention is better than Cure' என்பது போல் அதில் மாட்டிக் கொள்ளக் கூடாது.
சோசியல் மீடியா இன்றைக்கு கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்று. எல்லோரும் பயன்படுத்தும் சூழ்நிலைக்கு வந்துவிட்டோம். அதனால் சில பிரச்சினைகளும் இருக்கிறது. பல்வேறு மாற்றங்களும் இருக்கிறது. தவறான பொய்ச் செய்தி சென்னையில் பரப்பபடுகிறது என்றால், அடுத்த ஒரு நிமிடத்தில் கன்னியாகுமரியில் அந்த செய்தியை படித்து கொண்டு இருப்பார்கள்.
நாம் தவறு செய்திருக்க மாட்டோம். அது ராக்கெட் வேகத்தில் செல்கிறது. ஆனால் அந்த செய்தி தவறு என மறுப்பு செய்தி கூறுவது ஆமை வேகத்தில் செல்கிறது. பள்ளி கல்வித் துறையில் நவம்பர் மாதம் 'Child Abuse Day' தினத்தன்று பள்ளிகளில் இணையதள பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. கடந்த 10 மாதத்தில் மட்டும் 425 கோடி இணையதள மோசயில் சிக்கி ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது, அதில் உள்ள நன்மைகள் தீமைகள் பற்றியும், இணையதளத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றியும் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலிங் இயக்குனர் டாக்டர் காளிராஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நீட் தேர்வை ஒழிக்கும் வகையில், கையெழுத்து இயக்கம் தற்போது நடைபெறுகிறது. நீட் தேர்விற்கு விலக்கு பெறும் வரை ஓயமாட்டோம். எதிர்கட்சியாக இருந்த போதும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம். இன்னும் மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"என் கருத்துகளை லைக் செய்தால் போதாது... ஷேர் செய்யுங்கள்.. உங்கள் விமர்சனம் ஆன்டி வைரஸ் அலர்ட்" - சமூகவலைதள தன்னார்வலர்கள் மாநாட்டில் முதலமச்சர் ஸ்டாலின்!