சனாதன கருத்தியலுக்கு தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்-அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ, மகளிர் சுய உதவிக்குழு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 397 பயனாளிகளுக்கு 13 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "397 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா, பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் தாட்கோ மூலம் உதவித்தொகை, மகளிர் குழு உதவி தொகை என 13 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், காலை உணவு திட்டத்தின் கீழ் உணவருந்தும் மாணவ மாணவிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் உணர்வுபூர்வமாக அந்த குழந்தைகள் பேசிய வார்த்தை மகிழ்ச்சியாக இருந்ததாகும் அமைச்சர் தெரிவித்தார். இந்த வார்த்தைகள் தான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம் என அன்பில் மகேஷ் கூறினார்.
இதையும் படிங்க:உதயநிதியின் 'சனாதானம்' குறித்த பேச்சுக்கு பொங்கி எழும் பாஜக - ஆதரவாக களத்தில் குதித்த கூட்டணி கட்சிகள்
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து தெலுங்கானா அதிகாரிகள் ஆர்வத்துடன் கேட்டு எங்கள் மாநிலத்திலும் இந்த திட்டம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்ததாகவும், அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து காலை உணவு திட்டம் எப்படி செயல்படுகிறது என பார்வையிட்டதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
விரைவில் தெலுங்கானாவிலும் காலை உணவு திட்டம் தொடங்க இருக்கிறோம் என அவர்கள் தெரிவித்தது இந்த திட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறோம் என அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நீட் தேர்வு மட்டுமல்லாமல் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.
சனாதனம் கருத்தியலுக்கு தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம், யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை, சில கோட்பாடுகள் வைத்து இருக்கிறார்கள் என அமைச்சர் கூறினார். சம நீதியோ சம தர்மமோ இல்லாத ஒன்றை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தான் அமைச்சர் உதயநிதி சொல்லி இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.
முன்னதாக, அம்மன் பேட்டையில் 1980 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கலைஞர் பொன்விழா வளைவு மறு சீரமைப்பு செய்யப்பட்டதை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பெங்களூரில் அரங்கேறிய மதுரை கேங் வார்.. முன்விரோதம் காரணமா.. போலீஸ் விசாரணை!