தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதகுசாலை கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த 18 ஆம் தேதி இரவு, கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், மற்ற மூவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
நேற்று இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒருவரின் உடலை தேடி வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார், பின்னர் மீட்கப்பட்ட கொலஞ்சிநாதன் சிகிச்சை பெற்று வரும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவர்களுக்கு, கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அதன் அருகில் உள்ள ஐந்து அரசு மேல் நிலைப்பள்ளிகளும், 17 தனியார் பள்ளிகளும், 2 கல்லூரிகளும் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளது. முதலமைச்சர் உத்தரவிற்கு ஏற்ப மாற்று இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு புதிதாக சான்றிதழ்கள் வழங்கிட ஏதுவாக தனி டிஇஒ நியமனம் செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக, தனிநபர் தூண்டுதலுக்கு ஆளாகி இளைஞர்கள் தங்களை வாழ்க்கையை பலிகடா ஆக்கி கொள்ள வேண்டாம். பள்ளி குறித்த வழக்கில், நீதிபதி குறிப்பிட்டுள்ளபடியும், வீடியோ ஆதாரங்களின் படியும், இழப்பீடுக்கான தொகையை கலவரத்தில் ஈடுபட்டிருந்த நபர்களிடம் வசூலிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ஒரு குழந்தை இழப்பிற்கு நீதி வேண்டி போராடியவர்கள் இன்று 3 ஆயிரம் குழந்தைகளை பாதிக்கும் செயலில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களை சூறையாடியும், தீ வைத்து கொளுத்தியும் சேதப்படுத்தியுள்ளனர், இதனால் அவர்கள் சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், வெள்ள காலங்களில் அரசு சார்பாக, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அளிக்கும் எச்சரிக்கைகளை கவனத்தில் எடுத்து கொண்டு நடக்க வேண்டும், அலட்சியமாக இருக்க கூடாது. இதில் பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியரை கலந்து பேசவுள்ளேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மருத்துவர் டூ உளவுத்துறை ஐஜி - செந்தில்வேலன் கடந்து வந்த பாதை