தஞ்சாவூர்:கும்பகோணம் மேலக்காவிரி வடக்கு குடியானத்தெருவைச்சேர்ந்தவர், முகமது பசீர்(48). இவர் ஹாஜியார் தெருவில் மருந்துக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், இவரது மருந்துக்கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக இரு ஆண்டுகளாவே, பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. இதனைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் இவர் கோவை மாவட்டம், ஈச்சனேரி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரைகளை கடந்த ஒரு ஆண்டாக விற்பனை செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
கல்லூரி மாணவர் உயிரிழப்பு: இந்த போதை மாத்திரைகளை எடுத்துக்கொண்ட 2 மாணவர்களில் ஒருவர் கடந்த மாதம் 13ஆம் தேதி திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். தொடர்ந்து அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியபோது, அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடற்கூராய்வில், நரம்பு வழியாக போதை மருந்து எடுத்துக்கொண்டதில் உயர் ரத்த அழுத்தத்தால் இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
வாட்ஸ்அப்பில் போதை மருந்து வியாபாரம்: இதனையடுத்து, மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து கும்பகோணம் மருந்துக்கடை உரிமையாளர் முகமது பஷீர், வங்கிக்கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்ததும், வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாறிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கூரியர் மூலம் போதை மாத்திரைகளை விநியோகம் செய்ததும் தெரியவந்தது. இதுபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரைகளை இவர் பல ஆண்டு காலமாக விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, மருந்தக உரிமையாளர் முகமது பஷீரை கடந்த மாதம் 18ஆம் தேதி கோவை தனிப்படை போலீசார் கோவைக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குற்றம் உறுதி செய்யப்பட்டதன்பேரில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.