முதல்முறையாக மாநகராட்சி சேவைகளைப் பெற க்யூஆர் கோடு ஸ்கேன் - தஞ்சையில் அறிமுகம்! தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளைப் பெறவும் புகார்களைத் தெரிவிக்கவும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கவும்; சொத்து வரி, குடிநீர் வரி, மாநகராட்சி கடை வாடகை ஆகியவற்றைச் செலுத்தவும்;
உரிமம் பெறுவதற்கும் உரிமம் புதுப்பிக்கவும், காலதாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு கியூஆர்கோடு ஸ்கேன் வசதி தஞ்சாவூர் மாநகராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியினை மாநகராட்சிப்பகுதி கூட்டுறவு காலனி பகுதிகளில் உள்ள வீடுகளில் மேயர் ராமநாதன் க்யூஆர் ஸ்கேன் வசதி ஸ்டிக்கரை, ஒட்டும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலமாக, பொதுமக்கள் உடனடியாக சேவைகளைப் பெற முடியும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள 51 வார்டுகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கியூஆர் கோடு ஒட்டும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே குறைகளைத் தெரிவித்து பயன் பெற முடியும்.
இது குறித்து மேயர் ராமநாதன் கூறும்போது, ''தமிழ்நாட்டை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் வகையில் க்யூஆர் கோடு ஸ்கேன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மே மாதத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு- டிஆர்பி தலைவர் தகவல்!