இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை! - நம்மாழ்வாருக்கு மணிமண்டபம்
தஞ்சாவூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் உருவாக்க வேண்டி இயற்கை ஆர்வலர்கள் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தரப்பு இயற்கை ஆர்வலர்கள் சார்பில் வேப்பிலையுடன் வந்து நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், ஜெனீவா வரை சென்று நீதிமன்றத்தில் வாதாடி தமிழ்நாட்டின் மரமான வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றிருந்த நிலையில், உரிய ஆதாரங்களோடு வேம்புக்கான உரிமையை மீட்டெடுத்து தந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
அவரது ஆராய்ச்சி நூல்களை கொண்டு தஞ்சாவூரில் மணிமண்டபம் கட்டி, நூலகம் அமைத்தும் சிலை வைத்தும் இளைய தலைமுறையினர் இயற்கை வேளாண்மை பற்றி அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இயற்கை வேளாண்மை பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில், இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றி அறிந்து கொண்டு வருங்காலம் இரசாயன வேளாண்மையிலிருந்து விடுதலை பெற்று மண் மலடாவதிலிருந்து தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
எனவே இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தஞ்சையில் மணிமண்டபம், நூலகம் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.