தஞ்சாவூர்:கும்பகோணம் மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரன் திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த சைவத்திருத்தலங்களில் ஒன்றாகும். மகாமகப் பெருவிழா நடைபெறும் பன்னிரெண்டு முக்கிய சைவத் திருத்தலங்களில் முதன்மையான தலமாகவும் இது விளங்குகிறது. இங்கு ஆதி கும்பேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்க, இங்குள்ள தாயார் மங்களாம்பிகை, மந்திரபீடேஸ்வரியாக போற்றப்படுகிறார். இத்தலம் 51 சக்தி பீடங்களில் முதன்மையான சக்தி பீடமாகவும் விளங்குகிறது என்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான மங்களம் என்ற பெண் யானை (56), இக்கோயிலுக்கு 14 வயதில், 1980ஆம் ஆண்டு மறைந்த காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வழங்கப்பட்டு, தற்போது வரை சுமார் 42 ஆண்டு காலமாக இங்கு பராமரிக்கப்பட்டு, கோயில் பூஜை மற்றும் திருவிழாக்காலங்களில் இறைப்பணி செய்து பவனி வருகிறது.
இந்த யானை ஹாயாக குளிக்க வசதியாக, அருகில் இருக்கும் காவிரியாற்றில் தண்ணீர் இல்லாத காலத்தில், திருக்கோயில் வளாகத்திலேயே, கோவையைச் சேர்ந்த எம் அண்ட் சி பிராப்பர்ட்டி டெலவப்மென்ட் பி லிமிடெட் தனியார் நிறுவனத்தின் ரூபாய் 14 லட்சம் நிதியுதவியுடன் கோயில் வளாகத்தில், 70 அடி நீளமும், 30 அகலமும் கொண்ட இடத்தில், வெளிப்பகுதியில் யானை நடைபயிற்சி மேற்கொள்ளவும், உட்புறத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீர் கொள்ளளவும் கொண்ட அழகிய நீச்சல் குளம், 29 அடி நீளம், 29 அடி அகலம், ஐந்து அடி உயரத்தில் குளத்திற்குள் இறங்க சாய்வு தளத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, 56 வயதான கோயில் யானை மங்களம் நாள்தோறும் இந்நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளிக்கும் வசதி மங்களத்திற்கு புதிய வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இதனை கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.