தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் டவரில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு! - Cellphone Tower

கும்பகோணம் அருகே 250 அடி உயர செல்போன் டவரில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 21, 2023, 9:42 AM IST

தஞ்சாவூர்:அரியலூர் மாவட்டம், டி பழூர் வட்டம், காலான்தடை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (48). இவர் கும்பகோணம் அருகேயுள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரை பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில், சித்ராவிற்கு வழங்கப்பட்ட பாக சொத்தினை போலி ஆவணம் தயார் செய்து அவரது உறவினர் அபகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பல்வேறு அரசுத்துறைகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான குமார் தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன், கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் உள்ள 250 அடி உயர செல்போன் கோபுரம் அருகே தனது பிரச்னை குறித்து பதாகை எழுதி வைத்து விட்டு சுமார் 200 அடி உயரம் வரை சென்று அங்கு அமர்ந்து விட்டார்.

இதனை அவ்வழியாக ஆட்டோவில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இதன் அடிப்படையில் சோழபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் சர்மிளா, மற்றும் கும்பகோணம் தீயணைப்புத் துறையினர் 10 க்கும் மேற்பட்ட வீரர்களுடன் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தனியார் அவசர கால ஊர்தியும் அழைக்கப்பட்டது. பின்னர் செல்போன் டவரில் அமர்ந்து இருந்த குமாரிடம் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் என பலரும் மைக் மூலம் அவரது பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் பேசினர். ஆனால் குமாரோ தனது பிரச்னை தீர சம்பவ இடத்திற்கு கோட்டாட்சியர் தான் வரவேண்டும், அவர் உறுதியளித்தால் தான் நான் இறங்குவேன், என்னை இறங்க வைக்க, யாராவது மேலே ஏறினால், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

அரசுத்துறை அலுவலர்களின் வேண்டுகோள்களுக்கும், கெஞ்சல்களுக்கும் குமார் செவிமடுப்பதாக தெரியவில்லை. சுமார் 2 மணி நேரம் கடந்ததும், கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் வருகை தந்து மைக் மூலம் குமாரிடம் பேசினார். அவரது பிரச்சனைக்கு இன்றே தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதற்கும் குமார் மசியவில்லை, கோட்டாட்சியர் தான் வரவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

பின்னர் கோட்டாட்சியர் பணி நிமித்தமாகத் தஞ்சாவூர் சென்று விட்டதாகக் கூறியதையடுத்து கீழே இறங்கிட சம்மதித்தார். இதனையடுத்து சுமார் 01.15 மணியளவில், தீயணைப்புத்துறையை வீரர்கள், குமாரை பத்திரமாகக் கீழே அழைத்து வந்தனர். 250 அடி உயர செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த குமார் பத்திரமாக மீட்கப்பட்டதால் தீயணைப்பு படைவீரர்கள், காவல் துறையினர், வருவாய்த்துறையினர் என அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதையும் படிங்க:பணமதிப்பிழப்புக்கு பின் பொருளாதார நிலை என்ன?... வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details