பட்டுக்கோட்டை அருகில் உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மகன் சூர்யா (23). இவர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், கஜா புயலில் மின்சாரம் சீரமைப்பு பணியில் தினக்கூலியாக யூனியன் மூலமாக அழைக்கப்பட்டு வேலை பார்த்துவந்தார். அப்போது, மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது திடீரென மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொங்கியபடி இருந்தார்.
இதை எதார்த்தமாக அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்துவிட்டு உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து சூர்யாவை மின் கம்பத்திலிருந்து கீழே இறக்கி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததன் பேரில் சூர்யாவின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ஆனால் முழுமையாக குணம் அடைய முடியாமல் கை கால்கள் முடங்கிப் போய் பேசவும் முடியாமல் தவித்து வருகிறார்.