தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள கணேசன், அந்த வங்கி மூலம் கிரெடிட் கார்டு உள்ளிட்டவை கடன் அட்டைகளையும் பெற்று உள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கணேசன் தனது நண்பர் ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் ஆன்லைன் (ஜிபே செயலி) செயலி மூலம் பணம் அனுப்பி உள்ளார். அப்போது அதற்கான குறுந்தகவல் அவருக்கு வந்துள்ளது. அதில் அவருடைய வங்கிக் கணக்கில் 756 கோடியே 39 லட்சத்து 65 ஆயிரத்து 907 ரூபாய் இருப்பு இருப்பதாக செய்தி வந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாத நிலையில் இவ்வளவு தொகை எப்படி வந்தது என தெரியாமல் குழப்பத்தில் இருந்து உள்ளார். பின்னர், அருகில் இருந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்று சரி பார்த்தபோது, அதில் அவரது கணக்கில் பணம் இல்லை என தகவல் வந்துள்ளது.
ஆனால் தனக்கு வந்த குறுந்தகவலில் 756 கோடி ரூபாய் இருப்பதாக வந்ததால், மறுநாள் வங்கிக்குச் சென்று விவரம் தெரிந்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். அதன்படி தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட தனியார் வங்கிக்குச் சென்று, வங்கி மேலாளரை தொடர்பு கொண்டுள்ளார்.