தஞ்சாவூர்:கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமையில் கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவ.24) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய கோட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், சில துறை அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், இதனை சுட்டிக்காட்டிய விவசாயிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
மனுக்களின் நகலை மாலையாக அணிந்து சென்ற சமூக ஆர்வலர் இக்கூட்டத்தில், கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில், திருநரையூர், சமத்தனார்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் இருந்த திருக்குளம், வண்ணார்குளம், தேரடிக்குளம், சித்தனாதசுவாமி குளம், இராமநாதசுவாமி கோயில் குளம், வடகட்டளை குளம், திருநரையூர் பள்ளிவாசல் குளம் மற்றும் சமத்தனார்குடி குளம் ஆகிய எட்டுக்குளங்கள் முழுமையாக ஆக்கிரம்பில் உள்ளாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த ஆக்கிரமிப்பிலுள்ள நீர்நிலைகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கடந்த 8 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களும் அதனைத் தொடர்ந்து பல அரசு அலுவலர்களுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அம்மனுக்களின் மீது சம்பந்தபட்ட உயர் அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு அலுவலர்களின் இத்தகைய அலட்சியப் போக்கை கண்டித்தும், ஆக்கிரமிப்பிலுள்ள 8 குளங்களையும் உடனடியாக மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஒருவர் கோட்டாட்சியரிடம் நூதன முறையில் அரை நிர்வாணமாக (மேல் சட்டை இல்லாமல்) தேசியக் கொடியை ஏந்தியபடி சென்றார். அத்தோடு, முன்னதாக தான் இதுகுறித்து அரசு அலுவலர்களுக்கு அளித்த நூற்றுக்கணக்கான மனுக்களின் நகலை பெரிய மாலையாகவும் அணிந்திருந்த படி, கூட்டத்தில் பங்கேற்றார்.
இதனைத்தொடர்ந்து அவரின் புதிய மனுவினைப் பெற்ற கோட்டாட்சியர் பூர்ணிமா, மனுவின் மீது உரிய விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Exclusive: 'வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட்டில் 5 யானைகள் சர்ச்சை.. வனத்துறை அமைச்சரின் பதில் என்ன?