பாடலாசிரியர் சினேகன் செய்தியாளர் சந்திப்பு தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நடைபெறும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல திரைப்பட பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் மாநில இளைஞரணிச் செயலாளருமான சினேகன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில், மாநில அளவில் தொடங்கி, மாவட்ட அளவில், மண்டல அளவில் என கூட்டங்கள் நடத்தி கள ஆய்வு செய்து வருகிறோம். எப்போதும் எங்கள் கட்சி மக்களோடுதான் இருக்கும்.
தமிழக மக்களுக்கு எதிரானது எல்லாம் எங்களுக்கும் எதிரானதுதான். மக்கள் வளர்ச்சிக்கு எது பலமாக இருக்குமோ, அதை சார்ந்தே, மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து, தீர்மானமாக, நேர்மையாக தலைமை முடிவு செய்து உரிய காலத்தில் அறிவிக்கும்.
13 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறேன். மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறேன். மண் சார்ந்த, மக்கள் சார்ந்த இரண்டு நாவல் எழுதி முடித்துள்ளேன். விரைவில் அந்த நாவல் புத்தகமாக வெளியாக உள்ளது.
உச்ச நட்சத்திரத்துடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு குறித்து தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் முடிவு தெரிந்த பிறகு, அது குறித்த அறிவிப்பு முறையாக வெளியாகும். தற்போதைக்கு, திரைப்படங்கள் இயக்கும் எண்ணம் இல்லை. பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் தற்போது வன்முறைக் காட்சிகள் அதிகரித்து இருப்பது விரும்பத்தக்கதல்ல.
வன்முறை கூடாது என்பதை, வன்முறைக் காட்சி மூலம் சித்தரிப்பதை ஆதரிப்பதில் உடன்பாடு இல்லை. இதற்கு ரசிகர்களையும், குற்றம் சொல்ல முடியாது. இன்று உலக சினிமாவைப் பார்த்து ஆக்சன் படங்கள் தமிழிலிலும் அதிகரித்து வருவது தற்காலிகமானது.
ஒரு சிலகால இடைவெளியில் தமிழ் சினிமா திசை மாறி, பாதை மாறி, பயணப்படுவது உண்டு. ஆனால் மீண்டும் கலாச்சாரம், பண்பாட்டைப் போற்றும் வகையில் மென்மையான தன்மைக்கு தமிழ் சினிமா வரும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தொடர்விடுமுறையால் வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள்..போக்குவரத்து நெரிசலால் திணறிய தாம்பரம்