தஞ்சாவூர்:கும்பகோணத்தில் அமைந்துள்ள ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில் நிலத்திற்கு, தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன் மற்றும் சிவசேனா மாநில துணைத் தலைவர் பூக்கடை ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனுவை தாக்கல் செய்தனர்.
இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “மகாமகம் தொடர்புடைய 12 சைவத்திருக்கோயில்களில் ஒன்றான கும்பகோணம் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான புல எண் 55-இல், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 3 ஏக்கர் நிலம், 1973 முதல் தற்போது வரை 80 நபர்களுக்கு முறைகேடாக தனி நபர் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, தனி நபர் பெயர்களில் வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தனர். இவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் ஆஜராகி வாதாடினார்.