கும்பகோணம்: காசிராமன் தெருவில் ஒரே கட்டிட வளாகத்தினுள் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் இயங்கி வந்தது. இதில் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். இப்பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜீலை 16 ஆம் தேதி ஆடி வெள்ளி அன்று கீழ் தளத்தில் இருந்த சத்துணவு கூடத்தில் தீப்பிடித்தது. இந்த தீ கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்த கீற்று கொட்டகைக்கு பரவியது.
இந்த கோர தீ விபத்தில் சிக்கி 94 அப்பாவி பச்சிளம் பள்ளி குழந்தைகள் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் தீக்காயங்களால் படுகாயம் அடைந்து இன்றளவும் மாறா வடுவுடன் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவரது மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல் உதவியாளர் வசந்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து பழனிசாமி, வட்டாட்சியர் பரமசிவம், கட்டிடப் பொறியாளர் ஜெயச்சந்திரன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், பள்ளி ஆசிரியை தேவி, மகாலட்சுமி, அந்தோணி அம்மாள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி, ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மாதவன், பாலாஜி, சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ், பாலசுப்பிரமணியன், என மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் அப்ரூவர் ஆகி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து இவ்வழக்கு 2006ம் ஜூலை 12ம் தேதி தஞ்சை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனிடையே இவ்வழக்கிலிருந்து தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முகத்துப்பழனிச்சாமி, தாசில்தார் பரமசிவம் ஆகிய மூவரை தமிழக அரசு விடுதலை செய்து உத்தரவிட்டது.