தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் பொங்கல் தேரோட்டம் - பொங்கல்

108 வைணவத்தலங்களில் 3ஆவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் பொங்கல் தேரோட்டம் நடைபெற்றது.

பொங்கல் தேரோட்டம்
பொங்கல் தேரோட்டம்

By

Published : Jan 16, 2023, 12:01 PM IST

பொங்கல் தேரோட்டம்

தஞ்சாவூர்:கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என்று நம்பப்படுகிறது. அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் ஸ்ரீ சாரங்கபாணிசுவாமி எனும் ஆராவமுதன் அருள் பாலிக்கிறார். தாயார் கோமளவள்ளி, ஹேமரிஷி தவம் செய்த தலம் அவர் பெயரால் விளங்கும் ஹேம புஷ்கரணியில் தோன்றிய மகாலட்சுமியை (கோமளவள்ளி) பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக ரதத்துடன் இத்தலத்திற்கு எழுந்தருளி மணம் புரிந்ததாக வரலாறு.

பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக தன்னுடைய ரதத்திலேயே இங்கு வந்ததால், இங்கு கர்ப்பகிரகம் யானை, குதிரை பூட்டிய ரதத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. இது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. எனவே இங்கு சொர்கவாசல் தனியாக இல்லை.

பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 வைணவ திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்ததாக 3வது தலமாக ஸ்ரீ சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் விளங்குகிறது.

இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் ஸங்க்ரமண பிரமோற்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு இவ்வுற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் வெள்ளி இந்திர விமானம், வெள்ளி சூர்யபிரபை, வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி கருட வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், வெள்ளி யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதியுலா நடைபெற்று வந்தது.

விழாவின் 9ம் நாளான நேற்று (ஜன 15) மகரசங்கராந்தி எனும் தைப்பொங்கல் திருநாளையொட்டி, உற்சவர் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன், சாரங்கபாணிசுவாமி விசேஷ பட்டு வஸ்திரம், நறுமண மாலைகள் சூடி, தேருக்கு எழுந்தருள, திருத்தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவானுக்கு காட்சியளித்த அண்ணாமலையார்

ABOUT THE AUTHOR

...view details