தஞ்சாவூர்:கும்பகோணம் கக்கன் காலனியில் வசித்து வந்தவர் மாயவன் மகன் பரமு(எ)பரமசிவம் (வயது 38). சமத்துவ மக்கள் கட்சி பிரமுகரான இவர், அப்பகுதியில் பிளக்ஸ் போர்டு அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவர் இவரது கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தி தகராறு செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, பரமசிவம் மணிகண்டன் பெயரில் புகார் அளித்துள்ளார். இதனால் பரமசிவத்திற்கும், மணிகண்டனுக்கும் இடையே முன்பகை ஏற்பட்டது. இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு வந்து நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி மாலை, பரமுவின் தொழிற்கூடத்திற்கு வந்த மணிகண்டன் (வயது 26), மணிமாறன் (வயது 23), அய்யப்பன் (வயது 24), முருகன் (வயது 45), ஏழுமலை (வயது 52), மற்றும் கார்த்தி (வயது 23) ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல் தகராறு செய்ததுடன், பரமுவை அவரது உறவினரான திருமலை முன்னிலையில், சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல்துறை, 571வது குற்ற எண்ணாகக் கொண்டு இந்திய தண்டனை சட்டம்(IPC) 147, 148, 294(பி), 302, மற்றும் 120(பி) ஆர் டபுள்யூ 149 என ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்தனர்.