தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு சமீபத்தில் உள்ளாட்சிகளுக்கு கிராம சபை கூட்டம் போல, மாநிலம் முழுவதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வட்டங்கள் தோறும் அந்த அந்த வட்ட உறுப்பினர்கள் தலைமையில் வட்ட சபை கூட்டங்களை நடத்திட உத்திரவிட்டது. நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி நாளை முன்னிட்டு இக்கூட்டங்கள் நேற்றும், இன்றும் என இரு நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எதிர்கட்சி (அதிமுக) வட்ட உறுப்பினரான ஆதிலட்சுமி ராமமூர்த்தியின் 19 ஆவது வட்டத்தில் இன்று நண்பகல் 11 மணிக்கு கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, மாமன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி, தனது வட்டத்தில் வட்ட சபை கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்திருந்தார். ஏராளமான பொதுமக்களும் தங்கள் பகுதி குறைகள் மற்றும் கோரிக்கை குறித்து மனு அளிக்க காத்திருந்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பணியிலிருந்த சரவணன் நண்பகல் 12.15 வரை கூட்டத்திற்கு வரவில்லை.
இது குறித்து ஆணையரிடம் கேட்ட போது, அவரது உதவியாளர், ஆணையர் ஒரு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். வட்ட உறுப்பினரையே மனுக்களை வாங்கிக் கொள்ள சொன்னதாக கூறியதை தொடர்ந்து உறுப்பினர், ஆதிலட்சுமியே பொது மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் 32 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரும்பாலானவை, சாலையோரங்களில் உள்ள கழிவு நீர் ஓடையில் அடைப்பை சீரமைத்து தங்களை கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து காக்க வேண்டும் என்றும், சாலையில் உள்ள மேன்ஹோல்களை உயர்த்திட வேண்டும் என்றும், வட்டத்தில் உள்ள பூங்காவை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்றும், குறிப்பிடப்பட்டிருந்தது.