தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் ஸ்தலமாக விளங்கும், திருபுவனம் தர்மசவர்த்தினி சமேத கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயில், 16 ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.4 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்து, வருகிற 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிட்டுள்ளதாக தருமை ஆதீன குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார். தமிழ்நாட்டிலேயே புகழ்பெற்ற சரபேஸ்வரர் ஸ்தலமாக விளங்கும் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.
மூன்றாம் குலோத்துங்க சோழனால் கி.பி. 1178 முதல் 1218 ஆண்டுகளில் கட்டப்பட்ட இக்கோயிலில் மூலவர் நடுக்கம் தீர்த்த இறைவன் என போற்றப்படும் கம்பகரேஸ்வரர் என்றும், அறம் வளர்த்த நாயகியாக இறைவி தர்மசவர்த்தினி என்ற பெயருடனும் அருள் பாலிக்கின்றனர் என்றும் நம்பப்படுகிறது. அதேபோல, இரணியனுடைய குருதியை பருகிய நரசிம்மர் அறிவு திரிந்து உலகம் அனைத்தையும் அழிக்க தொடங்கிய போது இத்தல இறைவன், சரபப்பறவையாக உருவெடுத்து அதன் கொடுமையை அடக்கியதால் சரபேஸ்வரர் என்ற பெயருடன் தனி மூர்த்தியாக தனிசன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
இத்தகைய பெருமை கொண்ட சைவத்திருத்தலத்திற்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, இன்று (மார்ச் 10) மூன்று கடங்களில் புனிதநீர் நிரப்பி, யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து கோபுர ஆர்த்தி செய்தும், பந்தக்கால் முகூர்த்தம் செய்து நட்டும், புதிய கட்டுமானங்களுக்கு பூமி பூஜை செய்தும், பாலாலயம் செய்யும் வைபவம் தருமை ஆதீன குருமகா சன்னிதானமமாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.