ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்தது தொடர்பாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசன் கண்டனப் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தமிழ்நாடு கனிம வளங்களைச் சூறையாடும் நோக்கத்தோடு நுழைய இருக்கும் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களை விரட்டியடிக்க வேண்டும். அது, காவிரி கடைமடைப் பகுதிவாழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டிற்கு மாநில அரசு தடை விதித்திருக்கிறது.
தூத்துக்குடியில் 14 தமிழர்களைச் சுட்டுக்கொன்ற பாஜக-வின் கூட்டுக் கொள்ளையர்களான, வேதாந்தா நிறுவனத்திற்கு வழி விடுவதுதான், அதிமுக அரசின் நோக்கம் என்றால், அதைக் கடுமையாக எதிர்க்கவும், கண்டிக்கவும் செய்கிறோம். ஏற்கனவே, மாநிலத்தின் கனிம வளங்களை, ஒரு சல்லிக்காசு கூடப் பங்கீடு கொடுக்காமல், சூறையாடிக் கொள்ளையடித்துச் செல்லும் இந்தியப் பன்னாட்டுக் கூட்டு நிறுவனங்களை, வெளியேற்றிடும் கடமை கொண்ட தமிழ்நாடு அரசு, மக்களுக்கு ஆதரவாய் நிற்காமல், அந்தக் கொள்ளை நிறுவனங்களுக்கு அடிமை பட்டயம் எழுதிக் கொடுத்தது போல், கூட்டுச் சேர்ந்து அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
மக்களின் துணையோடு, சட்டப்படி அரசின் தடையை உடைத்து, மாநாட்டைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திடும் என அறிவிக்கிறோம். மேலும், மக்கள் போராட்டங்கள் அனைத்தும், நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வருவது வருந்தத்தக்கது’ எனக் கூறியுள்ளார்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசனனின் காணொளிப் பதிவு