தஞ்சாவூர்:கும்பகோணத்தில் நேற்று 16 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்காக நடைபெற்ற சோழ மண்டல வாக்குசாவடி பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "கும்பகோணத்தில் நடைபெற்ற சோழ மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறை கூட்டம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது, தமிழகம் முழுவதும் மொத்தம் பத்து இடங்களில் இது போன்ற மண்டல கூட்டங்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட கூட்டம் திண்டுக்கல் மண்டலத்தில் நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் காவிரி பிரச்னை தான் பெரிய பிரச்னையாக உள்ளது. ஆனால் இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகவும், அற்புதமாகவும் கையாண்டார், அவர் ஒரு அமைதி புரட்சியாளர், மக்களின் உணர்வுகளை தூண்டி மக்களை தவறான திசைக்கு இட்டுச்செல்லாமல், தனது ஆட்சியையும், கொள்கையினையும் பயன்படுத்தி, நிதானமாக, உறுதியாக தான் மேற்கொள்ளும் பணியை செய்கிறார்.
இதற்காக அவரை பாராட்டுதாகவும், அவரது முயற்சியால் இன்று கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறதாகவும், காவிரி ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் நமக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்திற்குரிய காவிரி நீரை திறக்க, கர்நாடகாவில் உள்ள பாஜக முன்னாள் முதலமைச்சர்கள் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா எதிர்ப்பு குரல் கொடுத்தவுடன், இங்குள்ள பாஜக தலைவர் அண்ணாமலை வாய் திறக்கவில்லை, அதற்கு எதிராக தமிழக மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வரவில்லை" என சாடினார்.