தஞ்சை பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ் ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் கோயில் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. தஞ்சை பெரிய கோயில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக விளங்கி பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயில் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி உலகப் புகழ் பெற்று வருகிறது.
இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிகின்றனர். மேலும் இக்கோயிலின் அழகை கண்டு ரசித்தும், பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹா வராஹி அம்மன், ஸ்ரீபெருவுடையார், ஸ்ரீபெரியநாயகி அம்மன், நடராஜர், வள்ளி தேவசேனா சமேத முருகர் உள்ளிட்ட சாமிகளை தரிசனமும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ஆம் ஆண்டு சதய விழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
இதனையடுத்து, இன்று (அக்.11) தஞ்சை பெரிய கோயிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நாதஸ்வர மேளம், தாளம் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட, பந்தக்காலுக்கு திரவியப்பொடி, பால், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர்கள் கவிதா, சதய விழாக் குழுத் தலைவர் செல்வம், கவுன்சிலர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, செயல் அலுவலர் மாதவன், கோயில் மேற்பார்வையாளர் ரெங்கராஜன் உள்ளிட்ட கோயில் அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ராஜராஜ சோழன் சதய விழா, சித்திரை தேர்த் திருவிழா, பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி பெருவிழா, நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம், ஸ்ரீமஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, மஹா நந்தியம் பெருமானுக்கு மகர சங்கராந்தி பெருவிழா, அன்னாபிஷேகம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ அபிஷேகம், ஸ்ரீபெருவுடையார், ஸ்ரீபெரியநாயகி அம்மன் திருக்கல்யாண வைபோகம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெய் நடிக்கும் 'லேபில்' வெப் தொடரின் மோஷன் போஸ்டர் வெளியீடு!