தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கருங்குளம் கிராமத்தில் கருங்குளம் என்ற மிகப்பெரிய குளம் உள்ளது.
இந்த குளத்தை ஒட்டி உள்ள கரை பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கரைகளை சீரமைக்கும் பொழுது சுவாமி சிலைக்கு அணியப்பட்ட அணிகலன்கள் கிடைக்கப்பெற்றது. இதை தவிர இந்த குளத்துக்கு மிக அருகாமையில் தற்போது மிகப்பெரிய நந்தி சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நந்தி சிலையை கண்ட மக்கள் இந்த இடத்தில் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும் இந்த கருங்குளத்திற்கு மிக அருகில் தான் இரண்டு மாதத்திற்கு முன்னர் ஒரு வீட்டில் காம்பவுண்ட் சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது 600 கிலோ எடையுள்ள ஐம்பொன்னாலான மிகப்பெரிய நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
மேலும் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்னாள் பழஞ்சூர் என்ற கிராமத்தில் மிகப் பழமையான கோயில் அருகே 14 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இந்த கருங்குளம் கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் உள்ள முதியவர்கள் கூறுகையில் சுற்றியுள்ள பகுதியிலும் கருங்குளம் கிராமத்திலும் அடுத்தடுத்து பூமியிலிருந்து பல வரலாற்று சுவடுகள் தென்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய ஒரு ஆன்மிக ஸ்தலம் இருந்திருக்கக்கூடும் எனவும் இந்த பகுதியில் ஒரு மிகப் பெரிய கோயில் புதையுண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கிராமத்தை தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: கஜா புயலால் பாதிப்படைந்த டெல்டா விவசாயிகள்: கைகொடுக்கும் தோட்டக்கலைத் துறை!