கடந்த 2015 - 2016ஆம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம், எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்தபோது எம்.பியாக கார்த்திக் சிதம்பரம் இல்லை எனவே இந்த வழக்கை மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.