தஞ்சாவூர்: கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, "தற்போது மேட்டூர் அணையிலிருந்து 10,100 கன அடி நீர் பாசனத்திற்காகத் திறக்கப்படுகிறது. திறக்கப்பட்ட நீர் கடைமடை வரை தடையின்றி செல்ல ரூபாய் 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் நான்கு நாள்களில் நிறைவடையும். திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3.10 ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கல்லணை கால்வாய், வெண்ணாறு, காவிரி ஆறுகளில் தலா 500 கனஅடி தண்ணீர் வீதம் திறக்கப்படுகிறது.
குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சி கொல்லி மருந்துகள், நெல் விதைகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சமாக பெறப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது அமைச்சர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கல்லணையில் டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு!