என்எல்சி விவகாரத்தில் தெளிவான முடிவு தேவை - கி.வீரமணி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை தஞ்சாவூர்:திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த உபயதுல்லா அவர்களின் புகழ் வணக்க கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'தமிழ்நாடு ஆளுநர் அரசியல் சட்டத்தை சரியாக படித்து தான் ஆளுநராக வந்தாரா? என்பதே கேள்விக்குறியாகிறது.
இதற்கு காரணம் என்னவென்றால், மிகத் தெளிவாக தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை உயர்நீதிமன்றத்தின் சட்ட நிபுணர்கள் உட்பட ஆராய்ந்து தான் அந்த வரைவையே தயாரித்திருக்கிறார்கள். ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியல், கன்கரன்ஸ் பட்டியல்மற்றும் மத்திய அரசின் பட்டியல் என அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மாநில அதிகாரம் என்ற தலைப்பின் கீழ் சூதாட்டத்தை, சட்டம் செய்கிற அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்றும் அவசர சட்டத்தையும் சட்ட வரைவையும் இரண்டையும் தயாரித்தார்கள். இந்த சட்ட வரைவில் என்னென்ன பிரிவுகள் இருக்கிறதோ? இதே பிரிவுகள் தான் இதற்கு முன்னால் வந்த அவசர சட்டத்திலும் இருக்கிறது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் எப்படி ஒப்புதல் கொடுத்தார்.
அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு, அதே பிரிவுகளை கொண்டிருக்கக் கூடிய சட்டத்திற்கு அதிகாரம் இல்லை என்று இப்போது சொல்கிறார்? என்றால் அப்போது முதலிலேயே அவர் தெரியாமல் கொடுத்தாரா? என்ற கேள்விக்கு தெளிவாக பதில் சொல்ல வேண்டும். ஆகவே, அவருக்கு அரசியல் சட்ட தெளிவு இல்லை என்பதற்கு அர்த்தம். காலம் தாழ்த்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை; அதிகாரம் இல்லை என்றால் உடனே அனுப்பி இருக்கலாம். 200ஆவது பிரிவின்படி, சட்டத்திற்கு இடம் உண்டு; அதிகாரம் உண்டு.
மேலும், அதை செய்ய வேண்டிய வேலை ஆளுநருக்கு கிடையாது. சட்டம் இயற்றி அது செல்லுமா செல்லாதா? என்று சொல்ல வேண்டியது நீதிமன்றங்களின் வேலையே தவிர, நீதிமன்றங்களின் வேலையை ஆளுநர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றம் தனி, இவர் எக்சிகியூட்டிவ் என்று சொல்லக்கூடிய ஆளுமை உடைய தலைவர் ஆவார். எனவே, இவர் அரசாங்கத்தின் அங்கமாக கருதாமல் எதிர்க்கட்சித் தலைவராகவே பாவித்து கொண்டு கடந்த காலத்தைப் போலவே நடந்து கொண்டு வருகிறது.
மீண்டும் இப்போது கூட்டப்பட உள்ள சட்டமன்றத்திலே அந்த சட்டத்தை நிறைவேற்றினால், அதற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியே கிடையாது. இதுதான் அரசியல் சட்டக்கூறு 200, இதற்கு மீறினால் ஆளுநர் அரசியல் சட்டத்தை மீறுகிறார் என்பது மட்டுமல்ல; அரசியல் சட்டத்தை கடைபிடிக்க வேண்டிய ஆளுநர் வேறு வேலை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தந்திருக்கிற தீர்ப்பு அதையும் மீறுகிறார் என்று அர்த்தம். எனவேதான், அவர் அரசியல் சட்டத்தை பற்றியும் கவலைப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பற்றியும் கவலைப்படவில்லை; மாறாக, ஆர்எஸ்எஸ் பற்றி தான் கவலைப்படுகிறார் என்று அர்த்தம் என்று தெரிவித்தார்.
மேலும், என்எல்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசாங்கம் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால், நெய்வேலி நிலக்கரிக்காக இடம் கொடுத்தவர்களுக்கு அவர்களுக்குரிய வேலைவாய்ப்பு ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிறுவனம் வேலைவாய்ப்பை கொடுக்கவில்லை. ஆகவே, அதற்கு ஒரு தீர்வை சமூகமாக கண்டாக வேண்டும்.
இந்த கிளர்ச்சியில் இருக்க வேண்டிய நியாயத்தை புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் தெளிவாக தமிழ்நாடு அரசு முன்வந்து நிச்சயமாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு செய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது தஞ்சாவூர் தொகுதி எம்பி எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஈபிஎஸ்-க்கு குவியும் வரவேற்பு - போஸ்டர்களில் மிஸ்ஸாகும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்?