தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின மக்கள் மீதான தாக்குதலின்போது காவல் துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்? - கே.பாலகிருஷ்ணன் - k balakrishnan

Communist Party Protest: வேங்கை வயல் சம்பவம் மற்றும் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் வரும்போது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க தயக்கம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

By

Published : Aug 19, 2023, 11:23 PM IST

தஞ்சாவூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 19) பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மேட்டூரில் நீர்மட்டம் குறைந்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கு மேல் செய்யப்பட்ட குறுவை சாகுபடி முற்றிலும் கருகி உள்ளது. குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் மிகப்பெரிய இழப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள குறுவை சாகுபடியை கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காமல் மறுத்து வருவது நியாயமில்லை. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவது என்பது வேதனை அளிக்கும் செய்தியாகும்.

தமிழ்நாட்டில் இளைய தலைமுறை மாணவர்கள் மத்தியில் சாதிய ஆதிக்க மனோபாவம் வளர்ந்து வருவதை காட்டுகிறது. பல அரசியல் கட்சிகள் சாதியற்ற, சமூக சமத்துவத்தை அமைக்க வேண்டும் என்ற பிரச்சனையை அணுகுமுறையில் யாரும் அணுகுவது இல்லை.

வாக்கு வங்கிக்காக இலை மறைகாய்போல் சாதிய சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதுதான் சாதிவெறி தாக்குதலுக்கு அடிப்படையாக இருக்கிறது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய அளவில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:உ.பி. முதலமைச்சரை சந்தித்தார் ரஜினிகாந்த்!

விலைவாசி உயர்வு, வேலையின்மையை எதிர்த்து, மணிப்பூர் மற்றும் மத வெறி அரசியல் ஆகியவற்றை எதிர்த்து பிரச்சார இயக்கமும், தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுவார்கள்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “வேங்கை வயல் சம்பவம் மற்றும் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் வரும்போது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதின் விளைவுதான், தினமும் ஏதாவது ஒரு சம்பவம் நடைபெறுகிறது. உறுதியான நடவடிக்கை எடுத்தால் அடுத்த சம்பவங்களில் ஈடுபட யோசிப்பார்கள்.

வேங்கை வயல் சம்பவத்தை ஏன் மூடி மறைக்கிறீர்கள்? உண்மையிலேயே குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையா, அல்லது குற்றவாளிகளை கண்டுபிடித்து மறைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். இந்தப் பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், நிர்வாகிகள் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"சந்திரயானுக்கும் லூனாவுக்கும் போட்டி என்று சொல்ல முடியாது" - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

ABOUT THE AUTHOR

...view details