தஞ்சாவூர் மாவட்டம் புதிய வீட்டு வசதி வாரியம் நெய்தல் நகரைச் சேர்ந்தவர் முருகவேல்-சாந்தி தம்பதி. இத்தம்பதிக்கு தர்ஷனா என்ற மகள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். முருகவேல் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி முருகவேலும் சாந்தியும் வீட்டை பூட்டிவிட்டு மகள் தர்ஷனாவை பார்ப்பதற்காக சென்னைக்குச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவிலிருந்த 10 சவரன் தங்கநகை, 1/2 கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஆகியவற்றுடன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் காரையும் திருடி தப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த முருகவேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டும், சொகுசுக் கார் இல்லாததைக் கண்டும் அதிர்ச்சியடைந்தார்.