தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகள் மட்டுமே; மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுவது ஜனநாயக விரோதம் - எம்எல்ஏ ஜவாஹிருல்லா!

கும்பகோணத்தை அடுத்துள்ள பாபநாசம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இன்று (டிச.31) செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ ஜவாஹிருல்லா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றித்தரும் தீர்மானங்களுக்குக் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்காமல் முட்டுக்கட்டை போடுகிறார் எனத் தெரிவித்தார்.

பாபநாசம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  எம்எல்ஏ ஜவாஹிருல்லா
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ஜவாஹிருல்லா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 10:48 PM IST

ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகள் மட்டுமே; மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுவது ஜனநாயக விரோதம் - எம்எல்ஏ ஜவாஹிருல்லா!

தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்துள்ள பாபநாசம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் பாபநாசம் எம்எல்ஏவும்,மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான பேரா.எம் ஜவாஹிருல்லா இன்று(டிச.31) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி மட்டுமே. ஆனால் அவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றித்தரும் தீர்மானங்களுக்குக் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்காமல் முட்டுக்கட்டை போடுகிறார். இது ஜனநாயக விரோதம்.

எனவே 2024ம் ஆண்டிலாவது நல்லது நடக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் வகையில், கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஆளுநர் கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விரும்புவதாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்தியா(INDI ALLIANCE) கூட்டணி வலுவாகவுள்ளது. இக்கூட்டணி வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது.

பிறக்கின்ற 2024 ஆங்கில புத்தாண்டு, நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமதர்மத்திற்கும் வலுசேர்க்கும் வகையிலும், மக்கள் சுதந்திரத்தையும், மதச்சார்பின்மையையும் சிறப்பாக அனுபவிக்கும் ஆண்டாக அமையப் பிரார்த்திக்கிறேன். தமிழக மக்களுக்காக 2023ம் ஆண்டு மட்டும் விமான பயணங்களைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் கி.மீ தூரம் சாலை பயணித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "டெல்லி உத்யோக்பவன் மெட்ரோ ரயில் நிலையம் அருகே காமராஜர் சாலையிலுள்ள மூன்று சாலை சந்திப்பு அருகே அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான மசூதியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செல்லும் சாலை என்பதால் சிறுபான்மை விரோத நோக்கில் அகற்ற முயற்சி செய்து வருகிறார். 1991 மத வழிபாட்டு பாதுகாப்பு சட்டத்தின் துணையோடு, நீதிமன்ற தடை உத்தரவு மூலம் தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அணி அமோக வெற்றி பெறும். தேர்தல் வாக்களிக்கும் முறையில், ஒப்புகை சீட்டு வழங்கும் நடைமுறையில் குறிப்பிட்ட சதவீத ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகிறது. இதனை முழுமையாக எண்ண வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் முடிவு. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் 'தேசம் காப்போம்' மாநாட்டினை தொடர்ந்து தற்போது ஜனவரி மாதம் 26ம் தேதி நடைபெறவுள்ள 'வெல்லும் ஜனநாயகம்' எனும் தலைப்பிலான மாநாடு, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சிறப்பான முன்னெடுப்பாகவும், இந்தியா கூட்டணி வெற்றிக்கான திருப்புமுனையாகவும் அமையும்.

இதுவரை இரண்டு முறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மீது அவதூறு பரப்பும் வகையில், உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார். இதனைத் தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலில் தக்க பதிலடி தருவார்கள். நான் என்ன செய்திருக்கிறேன் என்ற கேள்விக்கு 2021-22 மற்றும் 2022-23ம் நிதியாண்டுகளில் செய்த பணிகளின் முழு விவரத்தையும் புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களுக்குக் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதியில் அறிவுறுத்தலின்படி நேற்று(டிச.31) தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக இச்சந்திப்பு வாயிலாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்பிஎஸ்இ) உறுப்பினர்கள் நியமனம், வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்றுள்ள 49 நபர்கள், சட்டப்பிரிவு 161ன் படி விடுதலை பெறும் வாய்ப்பு போன்ற பல கிடப்பு மசோதாக்களுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சுற்றுலாப்பயணி படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடுக்கடலில் போராடிய புதுச்சேரி மீனவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details