கும்பகோணத்தில் பாமக சார்பில் "பாமக 2.0" செயல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று (செப். 7) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், "மதுபானம், போதைப்பொருள், சூதாட்டம் மூன்றும் தமிழ்நாட்டை பாதிக்கின்றன. தமிழ்நாட்டின் 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயில், 50 விழுக்காடு மது விற்பனையில் கிடைக்கிறது. இது வெட்க கேடானது.
வருவாயை அதிகரிக்க மாற்றுவழிகள் பல உள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தால் ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து குழு அமைத்து விசாரித்து அறிக்கை அளித்து 3 மாதம் கடந்த பிறகும் தடை செய்யப்படவில்லை. அதேபோல பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே மாத்திரை வடிவிலான போதைப்பொருள்கள் புழக்கத்தில் வந்தள்ளது. தமிழ்நாட்டில் தற்போது காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் என்பது மிகவும் முக்கியமானதாகும். இதுகுறித்து ஐநா சபை பல்வேறு எச்சரிக்கைகளை தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே நாம் தரமான சேமிப்புக் கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் 40 கிலோ மூட்டைக்கு 60 ரூபாய் வரை லஞ்சமாக பெறப்படுகிறது. .
பாமகவிற்கு மட்டும் 5 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு 50 ஆண்டு காலத்திற்கு தேவையான தொலைநோக்கு திட்டங்கள் அனைத்தையும் செயல் படுத்துவோம். அதற்கான செயல் திட்டங்கள் எங்களிடம் உள்ளது. காவிரி ஆற்றில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 240 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக சென்று கலந்துள்ளது. இது நடப்பு ஆண்டில் மட்டும் 300 டிஎம்சியாக இருக்கும் என்றும், கொள்ளிடத்தில் 10 இடங்களில் தடுப்பணைகளை கட்டினால் 70 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
தமிழ்நாட்டில் 55 ஆண்டுகள் ஆட்சி புரிந்த திராவிட கட்சிகளிடம் எந்த நீர்ப்பாசன திட்டமும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் மட்டும் அதிமுக எதிர்கட்சியாக உள்ளது. ஆனால் பாமக தான் நல்ல ஒரு எதிர்கட்சியாக இருந்து அரசு நல்லது செய்யும் போது பாராட்டியும், தவறுகள் செய்யும் போது போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறது.