நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்: விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு - தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
தஞ்சாவூர்: தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் "தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்காக பல அரியவகை திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
இயற்கையின் காலமாற்றத்தினால் நிலத்தடி நீர்பாசன முறையில் பயிர் செய்யும் விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக குறைந்த நீரை பயன்படுத்தி மாற்று பயிர் செய்வதன் அவசியத்தை உணர வேண்டும்.
விவசாயிகளுக்கு எடுத்து சொல்லும் விதமாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் பந்தல் அமைத்து காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தினால் கண்டிப்பாக நல்ல விளைச்சலும் லாபமும் கிடைக்கும்.
அந்தவகையில் இத்திட்டத்திற்கு 2017- 18 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 42.98 லட்சமும், 2018-19 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 57.38 லட்சமும், 2019-20ஆம் ஆண்டிற்கு ரூபாய் 91.69 லட்சமும், 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 158.827 லட்சமும் என தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இதுவரை 3.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பெற்று பல விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் துணை இயக்குநர் தோட்டக் கலைத்துறை மற்றும் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய வேண்டும் என்றார்.