தஞ்சாவூர்:கும்பகோணம் நகருக்கு வருகை தந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் கும்பகோணம் நால்ரோட்டில் உள்ள நவீன காவல் கட்டுப்பாடு மைய நுழைவு வாயிலில், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், கும்பகோணம் சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கான புதிய அலுவலக கட்டடத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். தொடர்ந்து மதுரை மற்றும் கும்பகோணத்தில் சிறப்பாக பணியாற்றிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு வெகுமதியுடன் நற்சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர். குறிப்பாக 1962 ஆம் ஆண்டு திருடு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டது சிறப்பிற்குரியது.
இந்த சிலைகள் விலை மதிப்பிட முடியாது. மீட்கப்பட்ட இந்த சிலைகள் அனைத்தும் இனி எந்த காலத்திலும் யாராலும் திருட முடியாத வகையில், சென்னை ஐஐடி உதவியுடன் சமீபத்தில் கைப்பற்றி 300 சிலைகள் உட்பட அனைத்து சிலைகளும் முப்பரிமாண முறையில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் ரேடியோ ப்ரீக்குவன்ஸி முறையில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
அப்படி மீறி இச்சிலை திருடப்பட்டால், இது எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் இந்த நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு கால கட்டங்களில் களவு போய் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளில், கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக மேலும் 60 சிலைகள் விரைவில் மீட்கப்பட உள்ளது.
சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கு திறமையும், ஆர்வமும், துணிந்து நடவடிக்கை எடுக்கும் அலுவலர்கள் இருந்தாலே சிறப்பாக செயல்பட முடியும். எண்ணிக்கை பெரியதல்ல. வெளிநாடுகளில் இருந்து 60 சிலைகளையும் விரைவில் மீட்க, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் ஜெயந்த் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நமது புராதன சிலைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், கஞ்சா வேட்டை ஒன்று மற்றும் கஞ்சா வேட்டை இரண்டு என இரு வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.