உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்தியளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, பட்டுகோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா பரவல் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நீதிமன்றம், காவல் நிலையம் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என, பலரும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய 3 இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட 26 நபர்களுக்கு இன்று(ஆக.6) ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 26 பேருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் தஞ்சை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.