கும்பகோணத்தில் தேவர் சிலை திறப்பு: மூவேந்தர் முன்னேற்ற கழக சார்பில் ஏற்பாடு! கும்பகோணம்:அசூர் புறவழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக முன் வைக்கப்பட்டிருந்த தேவர் சிலையை எடுத்து அதே பகுதியில், மாற்று இடத்தில் தேவர் சிலை வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று (அக்.28) மூவேந்தர் முன்னேற்றக் கழக சார்பில் தேவர் சிலை திறக்கப்பட்டது.
நாளை (அக்.30) தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குரு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு, தேவரின் முழு உருவச் சிலையினை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி எம் ஸ்ரீதர் வாண்டையார் மாலை அணிவித்து திறந்து வைத்தார். மேலும், நூற்றுக்கணக்காண பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
சிலையை திறந்து வைத்த பின் அப்பகுதி மக்களிடம் அவர் பேசுகையில், “கடந்த ஆட்சிக் காலத்தில், நாட்டின் விடுதலைக்காக போராடி, சிறை சென்ற தேசிய தலைவரான முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என 73 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தேன், ஆனால் நடக்கவில்லை.
தற்போதுள்ள ஆட்சியில் இது எப்போது நடக்கும் என்றும் தெரியவில்லை. எனவே, இதே கோரிக்கையினை தற்போது மீண்டும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். அதேநேரம், பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு, அந்த கணக்கெடுப்பிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் வழங்கிட வேண்டும். தற்போது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும்” எனக் கூறினார்.
தொடர்ந்து , இச்சிலை திறப்பு விழாவினை காண ஆயிரக்கணக்கானோர் பல்வேறு ஊர்களில் இருந்து வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் உட்கோட்ட போலீசார் பெரும் அளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!