தஞ்சாவூர்:அய்யம்பேட்டையில் சுறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்த மழையில் தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், பத்மா தம்பதியினர். இவர்களது மூத்த மகள் சுஷ்மிதா சென் (வயது 15). கணபதி அக்ரஹாரம் தட்டாரத் தெருவை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 15). இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோயிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட். 30) அய்யம்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் சுஷ்மிதா சென்னும், ராஜேஸ்வரியும் வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதில் இரண்டு மாணவிகளும் மரத்தின் இடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இருவரையும் உடனடியாக பள்ளி நிர்வாகிகள் மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சுஷ்மிதாசென் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதை அடுத்து இறந்த மாணவிக்கு நிவாரணம் வழங்க கோரி சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.