தஞ்சாவூர்:பட்டுக்கோட்டை அருகே ஏரி ஒன்றில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளப்படுவதாக புகார் வந்த நிலையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலாஜி, மண் எடுத்தவர்களை கைது செய்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தார். இதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ அண்ணாதுரை, மண் எடுத்தவர்களுக்கு ஆதரவாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு, வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடுமாறு பேசியதாக ஒரு ஆடியோ பரவி சர்ச்சையை கிளப்பு உள்ளது.
பட்டுக்கோட்டை, திட்டக்குடி அருகே உள்ள ஏரியில் அனுமதியின்றி விதியை மீறி சிலர் தொடர்ச்சியாக சவுடு மண் எடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை பொறுப்பு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலாஜிக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அவர் காவலர்களுடன் திட்டக்குடி ஏரிக்கு சென்று மண் கடத்தலில் ஈடுப்பட்டவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மண் எடுக்க பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து உள்ளார்.
இதனையடுத்து, மண் கடத்தியவர்களுக்கு ஆதரவாக பட்டுக்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ அண்ணாதுரை, டி.எஸ்.பிக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும், கைது செய்திருப்பவர்களையும் விடக் கூறியதாகவும், அதற்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், இருபது அடி ஆழம் வரை மண் வெட்டி எடுத்துள்ளனர். மண் எடுத்த விவகாரம் பெரிய சர்ச்சையாகி விட்டது. வழக்கு பதியவில்லை என்றால் நாங்கள் மாட்டிக்கொள்வோம்” என தெரிவிக்கிறார்.
அதற்கு, “தி.மு.க எம்.எல்.ஏ இந்த விவகாரம் தாசில்தார் கீழ் தானே வரும். தாசில்தாரிடம் கூறிவிட்டோம் வண்டியை விடுங்கள் எனக் கூற, அதற்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் என்னால் விட முடியாது. வழக்கு பதிவு செய்கிறோம் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்” என சொல்லிவிட்டு தொலைப்பேசியை வைத்து விட்டார்.