தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் கே.சரவணன் தலைமையிலும், துணை மேயர் சு.ப தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மொத்தம் 24 பொருட்கள் விவாதத்திற்காக வைக்கப்பட்டிருந்தன.
மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நிஹார் கேள்வி:கூட்டம் தொடங்கிய உடனேயே, 4வது வட்ட ஐயூஎம்எல் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நிஹார், “கடந்த சில நாட்கள் முன்பு, கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்து, அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்காக பாஜக ஆதரவு பெற்ற இந்து அமைப்பின் சார்பில் புனித நீர் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் கே.சரவணன் பங்கேற்றது குறித்தும், அதனை கண்டித்து அவரது கட்சியினர் சிலரே மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இது எங்களை போன்ற கூட்டணி கட்சியினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி கொள்கைக்கு எதிரான இயக்க நிகழ்வில் பங்கேற்றது சரியா” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மேயர் கே.சரவணன், “எதிர்பாராவிதமாக நான் வேறு ஒரு போராட்டத்தில் பங்கேற்ற இருந்த போது, போராட்டம் துவங்க கால தாமதமாகும் என்பதால் அருகில் உள்ள மகாமக குளம் சென்றேன். அங்கு சூர்யனார்கோயில் ஆதீனம் தன்னை சந்தித்து பேசினார். தான் திட்டமிட்டு அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும், மேலும் அப்போது எனக்கு அந்த அமைப்பு பாஜக தொடர்புடைய இந்து அமைப்பு என்றும் தனக்கு தெரியாது என்றும் கூறினார்.
மேயருக்கு அறிவுரை வழங்கிய துணை மேயர்:இதில் திருப்தியடையாத துணை மேயர், “மாநகராட்சி மேயர் சரவணன் தான் வகிக்கும், மேயர் பொறுப்பை முழுமையாக உணர்ந்து, அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்திடாத வகையில் இனிவரும் காலங்களில் அவர் செயல்பட வேண்டும்” என சுட்டிக்காட்டி மேயருக்கு அறிவுறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாமன்ற உறுப்பினர் அய்யப்பன் மீது உரிய நடவடிக்கை:தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான 14வது வட்ட மாமன்ற உறுப்பினர் அய்யப்பன், ஒரு புலனாய்வு இதழில், வெளியான மேயரின் பேட்டியை சுட்டிக்காட்டி, அதில் தான் மாநகராட்சி கூட்டத்தில் கூட்டணிக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேயர், அது உண்மை தான். நீங்கள் எப்போது கூட்டணிக்கு எதிராக தான் தொடர்ந்து கூட்டங்களில் பேசி வருகிறீர்கள்.