தஞ்சாவூர்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் விழா தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 1,280 நபர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க அனுபவம், ஆற்றல் வாய்ந்தவர் கலெக்டராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் தான் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. இந்த முழு பொறுப்புக்குக் காரணமானவர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
அவர் மாவட்ட கலெக்டராக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் காது கொடுத்து கேட்டு நிறைவேற்றியவர். விளம்பு நிலை மக்களுக்கு செந்தமிழ் நகர் என்ற பெயரில் குடியிருப்புகளை உருவாக்கி கொடுத்தார். இதேபோல, வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார். இதேபோல, பல்வேறு திட்டங்களை கலெக்டர் செயல்படுத்தினார்” எனத் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசும்போது, “பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் சேவையை பாராட்டி, அமைச்சர், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அலுவலர்கள், சமூக நல அமைப்புகள் பாராட்டு தெரிவித்தனர்.
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட ஆட்சியராக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது பணியை முத்திரை பதிக்கும் விதத்தில் செயல்படத் தொடங்கினார். விளிம்பு நிலை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் தனிக்கவனம் செலுத்த தொடங்கினார்.