தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சாலைகளில் அமைக்கப்பட்ட பெயர் மற்றும் திசை காட்டும் பலகைகள் சாய்ந்து விழுந்தன. மேலும் பைபாஸ் சாலைகளில் அமைக்கப்பட்ட தூரம் காட்டும் பலகைகளும் விழுந்து சேதமடைந்தன.
கஜா புயலில் சேதமடைந்த திசைகாட்டும் பலகைகள் சீர் செய்யப்படுமா? - தஞ்சை மக்கள் பாதிப்பு
தஞ்சை: கஜா புயலின் போது சேதமான திசை மற்றும் தூரம் காட்டும் பலகைகள் இன்னும் சீரமைக்கப்படாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இப்பகுதி மக்கள் கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டு ஏழு மாதங்கள் ஆகியும், திசை, தூரம் காட்டும் பலகைகள் சேதம் அடைந்ததை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால், பைபாஸ் சாலையில் வரும் கனரக வாகனங்கள் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தெரியாமல் தடுமாறுகின்றன. இதனால் குறிப்பிட்ட ஊருக்குச் செல்ல முடியாமல் வேறு பகுதிக்குச் மாற்றி சென்று விடுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சேதமான திசைகாட்டும் பலகைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.