தஞ்சாவூர்:வாக்கியப்பஞ்சாங்கப்படி நவக்கிரகங்களில் சனிபகவான் இன்று நண்பகல் 01.06 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வக்ர பெயர்ச்சியானதை முன்னிட்டு, குடும்ப சமேதராய், மங்கள சனியாக அருள்பாலிக்கும், கும்பகோணம் அருகேயுள்ள திருநறையூர் பர்வதவர்த்தினி சமேத இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஹோமம் மற்றும் விசேஷ அபிஷேக ஆராதனையில் திரளானோர் கலந்து கொண்டு எள் தீபங்கள் ஏற்றியும், அர்ச்சனைகள் செய்தும் தரிசனம் செய்து வழிபட்டனர்.
கும்பகோணம் திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் ஒன்பது கி.மீ தொலைவில் நாச்சியார்கோயிலுக்கு முன்பு உள்ள திருநறையூர் கிராமத்தில் அமைந்துள்ள சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சைவத்தலமாக விளங்கும் பர்வதவர்த்தினி சமேத ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரகாரத்தில் நவக்கிரகங்களில் ஈஸ்வரனாக போற்றப்படும் சனிபகவான் இங்கு, தனது இரு மனைவியர்களான தேஸ்டாதேவி, மந்தாதேவி மற்றும் இரு குழந்தைகளான மாந்தி, குளிகன் ஆகியோருடன் குடும்ப சகிதமாய் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்குபவராக வேறு எங்கும் காண முடியாதபடி தனக்கென்ற தனி இரும்பு கொடிமரம், பலிபீடம், காக்கை வாகனம் ஆகியவற்றுடன் மங்கள சனியாக இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலில் மூலவர் ராமநாதசுவாமிக்கு என்று தனிக்கொடி மரம் அல்லது பலிபீடம் என எதுவும் கிடையாது. நந்தி வாகனம் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு: தசரத சக்ரவர்த்தி தனக்கு ஏற்பட்ட நோய் தீரவும், தன் நாட்டு மக்களின் பஞ்சம் தீரவும், இத்தலத்திற்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டு நோய் நீங்கப்பெற்றதாகவும், பஞ்சம் நீங்கப்பெற்றதாகவும் இத்தல வரலாறு கூறுகிறது. இவரது சிலையினை வணங்கிய ரூபத்தில் சனி பகவான் சந்நிதியில் இன்றும் காணலாம். இராமபிரான் ராவணனை கொன்ற பின்னர் அயோத்தி செல்லும் வழியில் தந்தை தசரதர் வழிபட்ட இத்தலத்தின் பெருமை உணர்ந்து அனுமனுடன் இங்கு வந்து வழிபட்டதாக வரலாறு. இதன் பற்றிய முழு விவரங்கள் ராமேஸ்வரத்தில் மூலஸ்தானத்தில் இருப்பது போன்று இராமநாதசுவாமியும், பர்வதவர்த்தினியும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.