தஞ்சாவூர்:தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில், காசிநாதன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை (டிச.16) இவருடைய உணவகத்திற்கு சாப்பிட வந்தவர், அவர் கொண்டு வந்த பையை உணவகத்திலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளார். இதனை அறிந்த உணவக உரிமையாளர், அந்த பையை திறந்து பார்த்த நிலையில், அதில் கட்டு கட்டாக பணம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, அவர் தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவைச் செயலாளர் ரவி மூலமாக, தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் உணவகத்திற்கு வந்த போலீசாரிடம், உணவகத்தின் உரிமையாலர் பையை ஒப்படைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, போலீசார் அந்தப் பையை திறந்து பார்த்ததில், அதில் ரூ.4 லட்சம் மற்றும் 500 கிராம் எடையுள்ள வெள்ளிக் கட்டிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அந்தப் பையில் ஒரு செல்போன் நம்பர் எழுதப்பட்டு இருந்துள்ளது.
இதனால் போலீசார் அந்தப் பையில் இருந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உணவகத்தில் பையை தவற விட்டுச் சென்றவர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த கோட்டூர் வடக்கு தெருவைச் சேர்ந்த நகைக்கடை நடத்தி வரும் கணேஷ் என்பது தெரிய வந்துள்ளது.