தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத நல்லிணக்க விழாவாக மாறிய மொகரம்: இந்துக்கள் தீ மிதித்து வழிபாடு! - முஸ்லிம்

தஞ்சாவூர் அருகே சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை கிராம மக்கள் பத்து நாட்கள் விரதம் இருந்து, தீ மிதித்து பக்தியுடன் கொண்டாடி வருகின்றனர்.

thanjavur
தஞ்சாவூர்

By

Published : Jul 30, 2023, 11:12 AM IST

மத நல்லிணக்க விழாவாக மாறிய மொகரம்: இந்துக்கள் தீ மிதித்து வழிபாடு!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசநாடு புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கிராமத்தில் 5 தலைமுறையாக மொகரம் பண்டிகையை 10 நாட்கள் முன்பாக ஊரின் மையப் பகுதியில் அல்லா சாமி உருவம் கொண்ட பொருட்களை கோவிலில் வைத்து பந்தல் அமைத்து, விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி, இந்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு (ஜூலை 28) அல்லா சாமிக்கு மாலை அணிவித்து விட்டு பஞ்சா கரகத்தை வீதி உலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச்சென்றனர். அங்கு வீடுகளில் கரகம் எடுத்து வந்தவருக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்து, வீடுகள்தோறும் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து வழிபட்டனர்.

இதையும் படிங்க:வீட்டின் கதவை உடைத்து கரடி அட்டகாசம்.. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை !

நேற்று இரவு(ஜூலை 29) தொடங்கி இன்று(ஜூலை 30) அதிகாலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி கோவில் பஞ்சா கரகம் சென்றது. பின்னர் தீ மிதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அல்லா சாமியைத் தூக்கி வந்தவர்கள் முதலில் தீயில் இறங்கினர்.

இதைத்தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான இந்துகள், இஸ்லாமியர்கள் என தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தி வழிபட்டனர். இஸ்லாமியரின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள காசநாடு புதூர் கிராமத்தில் அவர்கள் முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து இன்றும் பாரம்பரியமாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ''தங்களது ஊரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இந்த விழாவை இணைந்து பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இந்த ஊரில் பிறந்து திருமணமான பெண்கள் வெளியூரில் இருந்தால், இந்த மொகரம் பண்டிகை அன்று சொந்த ஊருக்கு வந்து விழாவில் கலந்து கொள்வார்கள்” என்றும் தெரிவித்தனர்.

மேலும், இஸ்லாமியர்கள் வழிபடும் மொகரம் பண்டிகையை இந்துக்களும் சேர்ந்து வழிபடுவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் காசநாடு புதூர் கிராமம் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி மலேசிய ஹாக்கி வீரர்களுக்கு வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details