தஞ்சையில் பட்டாக் கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம் தஞ்சாவூர்: புன்னைநல்லூரில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இந்து எழுச்சி பேரவையின் தஞ்சை மாநகர் மாவட்டத் தலைவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், போலீசார் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சாய்ரகு (39). இந்து எழுச்சி பேரவையின் தஞ்சை மாநகர் மாவட்ட தலைவராக உள்ள இவர், தனது பிறந்தநாளை கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தஞ்சை நாகை சாலையில் உள்ள பேரவை அலுவலகத்தில் வைத்து நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
மேலும், பிறந்தநாள் விழாவில், இந்து எழுச்சிப் பேரவை நிர்வாகிகள் வழங்கிய பட்டாக் கத்தியால் சாய்ரகு கேக் வெட்டியுள்ளார். ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், தஞ்சை தாலுக்கா போலீசார், பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சாய்ரகு மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கடலூர் காவலர்கள் கட்டிக்கொடுத்த கருணை இல்லம்.. தந்தையை இழந்த குடும்பத்திற்கு அன்புச்சீர்.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?