தஞ்சாவூர்: உலகம் முழுவதும் இன்று(பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர், ஆபாச காதலை எதிர்ப்பதாகவும், தெய்வீக காதலை போற்றுவதாகவும் கூறி போராட்டம் நடத்தினர்.
இதற்காக, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் காதலர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அருகேயுள்ள யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் முன்புவந்தனர். அப்போது, கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் பல காதல் ஜோடிகள் அத்துமீறி, இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாகவும், தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்திற்கும் எதிராகவும் நடந்து கொள்கின்றனர் எனக் குற்றம்சாட்டினர்.
எனவே, இத்தகைய காதல் ஜோடிகளுக்கு இக்கோயில் வளாகத்திலேயே, திருமணம் செய்து வைக்க ஏதுவாக இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் மாநில செயலாளர் கா.பாலா தலைமையில் 10க்கும் மேற்பட்டோர், மலர் மாலைகள், உதிரிப் பூக்கள், வெற்றிலை பாக்கு, பழங்கள், அட்சதை, தாலி சரடு, மாங்கொத்து, அரசாணி கால், ஆகியவற்றுடன் தாராசுரம் வீரபத்திரசுவாமி கோயிலில் இருந்து தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் நோக்கி, நாதஸ்வர மேள தாளம் முழக்க ஊர்வலமாக வந்தனர்.