தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற காளி தேவி கோயிலான அய்யாவாடி, பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் திங்கட்மிழமை இமாச்சல் பிரதேச துணை முதலமைச்சர் முகேஷ் அக்னிஹோத்ரி, தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து நிகும்பலா யாகம் செய்தார்.
இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தலத்திற்குத் தேர்தல் வெற்றிக்காக நிகும்பலா யாகம் செய்வதாக பிராத்தனை செய்து சென்றுள்ளார். தற்போது இவர் வெற்றி பெற்று துணை முதலமைச்சராகி இருப்பதால், தனது பிராத்தனையினை நிறைவேற்றிடத் தனது மனைவி மற்றும் மகன் என குடும்ப சகிதமாக அய்யாவாடி வந்த துணை முதலமைச்சர் முகேஷ், பிரத்தியங்கிரா தேவி சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ள பெரிய அக்னிக் குண்டத்தில் நிகும்பலா யாகம் எனும் மிளகாய் வற்றல் யாகம் நடத்தினார்.
இசெட் பிளஸ் (z - plus) பாதுகாப்பில் உள்ள இவர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்வினை புகைப்படம் மற்றும் காட்சிப்பதிவு செய்ய ஊடக செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோயில் வளாகம் மற்றும் கோயில் வெளிப்புறப்பகுதிகளிலும், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், தஞ்சையில் இருந்து சச்சின் மோப்பநாய் மற்றும் குழுவினர் எனப் பலரும் கோயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.