தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பு ஆரம்பத்தில் இருந்தே வலுத்துவருகிறது. இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குழந்தை அரசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள எஸ்.இ.டி. (SET) மஹாலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான உள் அரங்கக் கூட்டம் மாநாடாக நடைபெற உள்ளது. நண்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டம் இரவு 10 மணி வரை நடைபெறும். ஜூலை 21ஆம் தேதி (அ) அனுமதி அளிக்கும் நாளில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், சூழலியல் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக சுவரொட்டிகள், அரங்க ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்தக் கூட்டத்திற்கு அனுமதி, காவல் துறை பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் காவல் ஆய்வாளரிடம் மனு கொடுத்து, உரிய உறுதிமொழி வழங்கினோம்.
அதன் பிறகும் காவல் ஆய்வாளர், கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, பேச்சுரிமை, அடிப்படை உரிமையின் அடிப்படையில் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் இது குறித்து கும்பகோணம் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.