தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்தமருத்துவம், சுவடியியல், கல்வெட்டியல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் சித்தமருத்துவ துறையின் கீழ் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் மூலிகை பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள், மருத்துவக் குணம் கொண்ட மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் நான்கு புறமும் சுற்று சுவர் ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு விழிப்புணர்வு, பாரம்பரிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
அதுபோல் மூலிகை பண்ணை அருகே உள்ள சுற்று சுவரில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிற்கு கீழாநெல்லி, குப்பைமேனி, நெருஞ்சி, நித்தியகல்யாணி, முடக்கத்தான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மூலிகைகள் தத்ரூபமாக வரையப்பட்டதோடு, அதன் தாவரப்பெயர், அதன் பயன்பாடு, அது எந்த குடும்பத்தை சார்ந்தது, எந்த நோய்க்கு குணப்படுத்தக் கூடியது என பல்வேறு தகவல்களும் அந்த ஓவியத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
தத்ரூபமாக வரையப்பட்ட மூலிகைகள் குறிப்பாக மருத்துவக்கல்லூரி சாலை வழியே செல்லக்கூடியவர்களுக்கு, இத்தகவல் என்பது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை பலரும் நின்று படித்து செல்கின்றனர்.
இதையும் படிங்க:விற்பனையில் அசத்தும் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட முகக் கவசங்கள்...!