தஞ்சாவூர்:உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 6ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தின் பல முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை இந்துக்களின் வெற்றி தினம் என கூறியும் உத்தரபிரதேஷ முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் முன்பாக இந்து மக்கள் அனுமன் சேனா சார்பில் பொது மக்களுக்கு மாநில பொதுச் செயலாளர் பாலா தலைமையில் நிர்வாகிகள் லட்டுகள் வழங்கி கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 06ஆம் தேதியான இன்று சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் இனிப்பு வழங்கி கொண்டாடியமைக்காக, இந்து மக்கள் அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா உட்பட 6 நிர்வாகிகளைக் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து ஸ்ரீநகர் காலணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர்.