தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகிலேயே மிக உயரமான நடராஜர் சிலை அறங்காவலர்களிடம் ஒப்படைப்பு - தமிழிசை பங்கேற்பு - tallest statue of Nataraja

உலகிலேயே மிக உயரமான நடராஜர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, அதனை முறைப்படி தெலங்கானா ஆளுநர் தமிழிசை லட்சுமி நாராயணி பீட அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.

உலகிலேயே மிக உயரமான நடராஜர் சிலை அறங்காவலர்களிடம் ஒப்படைப்பு - தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பு
உலகிலேயே மிக உயரமான நடராஜர் சிலை அறங்காவலர்களிடம் ஒப்படைப்பு - தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பு

By

Published : Sep 13, 2022, 8:00 AM IST

Updated : Sep 13, 2022, 10:37 AM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலையை அடுத்துள்ள திம்மக்குடி கிராமத்தில், கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்ப சாலையை வரதராஜ் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இங்கு முக்கால் அடி முதல் 11 அடி உயரம் வரையிலான பல சிலைகளை தயார் செய்து தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, பல வெளிநாடுகளுக்கும் கோயில்களுக்கும் அனுப்பி வருகிறார்.

இதனிடையே கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரம் கோயிலில் உள்ள நடராஜர் சிலைதான் 8 அடி உயரத்துடன் இதுவரை உலகிலேயே பெரிய ஐம்பொன் நடராஜர் சிலையாக இருந்தது.

உலகிலேயே மிக உயரமான நடராஜர் சிலை அறங்காவலர்களிடம் ஒப்படைப்பு - தமிழிசை பங்கேற்பு

ஆனால், கடந்த 2006 ஆம் ஆண்டு இதைவிட பெரிதாக 11 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலையை இந்திய அரசின் ஏற்பாட்டின்படி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் அணு ஆராய்ச்சி மையத்தில் வைப்பதற்காக தயார் செய்தார். இவ்வாறு தயார் செய்யப்பட்ட நடராஜர் சிலையே இதுவரை உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையாக இருந்தது.

இருப்பினும் இவரது சாதனையை இவரே முறியடித்ததாக இருக்க வேண்டும் என்பதை கனவாகக் கொண்ட வரதராஜ், இதைவிட பெரிதாக சுமார் 23 அடி உயரத்தில் நடராஜர் சிலை வடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதுவும் ஒற்றை வார்ப்பில் என்பதனை முக்கியமாக கொண்டு செயல்படத் தொடங்கினார்.

இதற்காக சுமார் நான்கு ஆண்டுகள் தேடலின்போது, கடந்த 2010 ஆம் ஆண்டில் சிலை தயாரிக்கும் பொறுப்பை ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளது. இதன் பிறகு பொறுப்பேற்ற நபரால் தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட முடியவில்லை.

பின்னர் அடுத்த இரண்டு ஆண்டு தேடலில் மற்றொரு பொறுப்பாளரை நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மூலம், வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பீடம் கிடைத்துள்ளது. எனவே மீண்டும் பணிகள் தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள் நிறைவில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 25,000 சிற்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பின் வெளிப்பாடாக தற்போது இப்பணிகள் முழுமை பெற்றுள்ளது.

15 டன் எடையில் 23 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்ட நான்கு கரங்களுடன் ஒற்றை வார்ப்பு முறையில் இச்சிலையை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து வரதராஜ் தெரிவிக்கையில், “முயலனை மிதித்திக் கொண்டிருப்பதைபோல ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையின் இரு மகரப் பறவைகளுடன் தத்ரூபமாக, முழுவதும் சோழர் கால பாணியிலேயே அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் பெரிய திருவாட்சியில் 102 தாமரைப்பூக்கள், 50 பூதகணங்கள், 52 சிங்கங்கள், 34 சர்பங்கள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் வரிசையில் சிவ அட்சரங்கள் 51ஐ பிரதிபலிக்கும் வகையில் 51 தீ சுவாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ள 6 அடி உயரம் கொண்ட பீடத்தில், திருவாசகங்கள் பொறிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என கூறினார்.

இதன் பணிகள் அண்மையில் முழுமை பெற்றுள்ளது. எனவே இந்த பிரமாண்டமான நடராஜர் சிலைக்கு சோமவார தினமான நேற்று (செப்டம்பர் 12) மாலை பிரதோஷ வேளையில், நந்தி வாத்தியங்கள் முழங்க, புனித நீர் நிரப்பிய கடங்களை வைத்து தமிழ் முறைப்படி, சிவனடியார்கள் சிறப்பு யாகங்கள் நடத்தினர்.

இறுதியாக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நக்கீரன் கோபால், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர் சுரேஷ் ஆகியோர் சிலையை வடிவமைத்த கலைஞர்கள் ஆகியோருக்கு அபிஷேகம் செய்தும், உதிரி மலர்கள் தூவியும் மரியாதை செய்தனர்.

தொடர்ந்து, பிரமாண்டமான நடராஜர் சிலைகள் சிவனடியார்கள் முன்னிலையில் விபூதி, பால், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது. அப்போது 20க்கும் மேற்பட்ட வெண்புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன.

உதிரி ரோஜா மலர்கள் தூவ, இப்பிரம்மாண்டமான சிலையை டாக்டர் தமிழிசை சௌதர்ராஜன் முறைப்படி லட்சுமி நாராயணி பீட அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், “இந்த பிரமாண்டமான 23 அடி உயர நடராஜர் சிலையை ஸ்தபதிகள் சீனிவாசன், வரதராஜ் மற்றும் மயூத் ஆகியோர் இணைந்து நம்மை படைத்த இறைவனை அவரகள் படைத்திருக்கிறார்கள்.

இதற்காக இவர்கள் 10 ஆண்டுகள் பொறுமையாக எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றையும் மிக சிறப்பாக அழகாக வடிவமைத்து, நம் இந்திய கலையை கலாச்சாரத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களது பணி அமைந்துள்ளது.

அவர்களை பாராட்டுகிறேன். இப்பணிக்கு பக்க பலமாக இருந்த நக்கீரன் கோபாலும் வேலூர் நாராயணி பீடம் அம்மாவும் இருந்துள்ளனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சோழர் கால ஒற்றை வார்ப்பு முறையில் 23 அடி உயர நடராஜர் சிலை

Last Updated : Sep 13, 2022, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details