தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை மருத்துக்வகுடியில் கிராமத்தில், 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. சுவாமி, அம்பாள், விநாயகர், ஆறுமுகர், முன்மண்டபம், மடப்பள்ளி, மற்றும் சுற்று மதில் சுவர் ஆகியவை முற்றிலும் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில், சேதமடைந்திருந்த நிலையில், இதனைச் சீரமைக்க, இந்து சமய அறநிலையத்துறை இக்கோயில் திருப்பணிகளுக்காக 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.
மேலும் அப்பகுதி மக்கள் சுமார் 75 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணி கடந்த ஜனவரி 26ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
சுமார் 400 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு, சுமார் 84 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1938ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தற்போது தான் திருப்பணிகள் நிறைவுபெற்று வருகிற 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி, நிறைவாக, வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் சிறப்காக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கும்பாபிஷேக திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் இன்று(நவ-14) நேரில் பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.